மத்திய அரசின் சூழ்ச்சிக்கு அடி பணியாமல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு நடத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது ’’தேசியத் தகுதி, நுழைவுத்தேர்வுகளை ரத்துச் செய்யவில்லை. ஆனால், 12ஆம் வகுப்பு தேர்வு மட்டும் ரத்து என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு எழுத்துப்பூர்வமான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும். மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தவரையில், 12ஆம் வகுப்பு தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் கல்லூரியில் சேர்க்கை நடைபெறுகின்றன. மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றின் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என பிரதமர் அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறிவுத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறும். இந்தாண்டு மட்டுமல்ல, இனி எப்போதுமே 12ஆம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பது தான் அவர்களின் திட்டம்.
வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு 12ஆம் வகுப்பு தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிக்கும் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் தேர்வு கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் கருத்தாகும். மத்திய அரசின் சூழ்ச்சிக்கு அடி பணியாமல் தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு அதன்படி தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும்.
கரோனா தொற்று குறைந்தப் பின்னர் ஒரு மாதம் முன் அறிவிப்போடு தேர்வினை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில், பள்ளிக்கல்வித்துறையில் வலுவான கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சியை தொடரும் வகையில் 12ஆம் வகுப்புத் தேர்வு நடக்கும் என்பதை அறிவிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு