சென்னை: கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். அத்தப்பூக் கோலம், படகுப் போட்டி என பத்து நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும். கேரளாவில் வாழும் அனைத்து மதத்தினரும், புலம்பெயர்ந்த மக்களும் எந்தவித பாகுபாடுமின்றி ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் கேரள மாநிலத்தினர், பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னையில் வசிக்கும் கேரள மாநில மக்கள் அதிகளவில் விமானத்தில் செல்வதால், சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, விமான கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வழக்கமான விமான கட்டணம் 3,225 ரூபாய், ஆனால் தற்போதைய கட்டணம் 10,945 ரூபாய் முதல் 19,089 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கொச்சிக்கு வழக்கமான விமானக் கட்டணம் 2,962 ரூபாய், தற்போதைய கட்டணம் 6,361 ரூபாய் முதல் 10,243 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வழக்கமான கட்டணம் 3,148 ரூபாய், தற்போதைய கட்டணம் 5,914 ரூபாய் முதல் 21,228 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னையிலிருந்து கண்ணூருக்கு வழக்கமான கட்டணம் 3,351 ரூபாய், தற்போதைய கட்டணம் 7,292 ரூபாய் முதல் 13,814 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
விமானக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த போதும், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக கேரள மக்கள் ஆர்வத்துடன் விமானங்களில் பயணித்து வருகின்றனர். ஓணம் பண்டிகைக்காக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது போல், சென்னையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கூடுதலாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் செல்லவிருந்த விமானங்கள் தாமதம் - காரணம் என்ன?