சென்னையில் பெயர் சொல்லும் முக்கிய ரவுடிகளுல் ஒருவர் ரவிசங்கர் (எ) கல்வெட்டு ரவி. வட சென்னையைக் கலக்கிய மாலைக்கண் செல்வம் என்ற பிரபல ரவுடியின் வலது கையாக இருந்தவர். இவர், ரவுடி எஸ்பிளனேடு நித்தியாநந்தத்தை பாரி முனையில் வைத்து கொலை செய்ததையடுத்து, கல்வெட்டு ரவியின் பெயர் சென்னை முழுவதும் பரவியது.
இதனைத் தொடர்ந்து கேளம்பாக்கம் கன்னியப்பன், தண்டையார்பேட்டை வீனஸ், ராயபுரம் பிரான்சிஸ், பொக்கை ரவி, வண்ணாரப்பேட்டை சண்முகம் என ரவி செய்த கொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனதாக கூறப்படுகிறது.
இவர் மீது சென்னை காவல் நிலையத்தில் மட்டும் ஆறு கொலை வழக்குகள் உள்பட சுமார் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆறு முறை இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கொலை மட்டுமல்லாமல் ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
![கல்வெட்டு ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-rowdyarrest-script-7202290_28072021173345_2807f_1627473825_1105.jpg)
யாரையாவது மிரட்ட வேண்டும் என்றால் அவரை நடுக்கடலுக்குத் தூக்கிச் சென்று மிரட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அங்கு வைத்து அவர்களைச் சித்திரவதை செய்தே தனது காரியத்தை ரவி சாதித்துக் கொள்வதாக கூறப்படுகிறது. கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறைதிலிருந்தே தனது காரியங்களை திட்டம் போட்டு செய்பவர்.
குற்றச்செயல்களை முடக்கிய ரவுடி
சென்னையில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடிகள் பங்கு குமார், ஆசைத்தம்பி, அயோத்திகுப்பம் வீரமணி, மணல்மேடு சங்கர், வெங்கடேச பண்ணையார், மிலிட்டரி குமார், குரங்கு செந்தில், வெள்ளை ரவி உள்ளிட்டோர் வரிசையில் தனது பெயரும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சமீப காலமாக தனது குற்றச்செயல்களை முடக்கிவிட்டு சமூகத் தொண்டாற்றப் போவதாகவும், வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலையளித்து உதவப் போவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும், கடந்தாண்டு ஆகஸ்டு 9 ஆம் தேதி தன்னை பாஜக விலும் இணைத்துக் கொண்டார்.
![கல்வெட்டு ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-rowdyarrest-script-7202290_28072021173345_2807f_1627473825_691.jpg)
அதன் பின்பும் இரு கொலை முயற்சி வழக்குகளில் தொடர்பிருப்பதாகக் கூறி தனிப்படை காவல் துறையினரால் ஆந்திராவில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கைது செய்யப்பட்ட கல்வெட்டு ரவி பிணையில் வெளிவந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் ‘டேர்’ (DARE) எனப்படும் 'Direct Action against Rowdy Elements' என்ற ஆப்பரேஷன் மூலம் சென்னையின் முக்கிய ரவுடிகள் பட்டியலை வகைப்படுத்தி பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோரை பொறிவைத்து பிடித்து ரவுடிகளை களையெடுத்து வருகிறார்.
![பாஜவில் இனைந்த கல்வெட்டு ரவிக்ஷ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-rowdyarrest-script-7202290_28072021173345_2807f_1627473825_505.jpg)
காவல் ஆணையரிடம் மனு
நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் 21 முக்கிய குற்றவாளிகளின் பெயர் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அதில் ரவுடியான கல்வெட்டு ரவியின் பெயரும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் கல்வெட்டு ரவி, தனது மனைவி, வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, தான் திருந்தி வாழ விரும்புவதாகவும், சமூகத் தொண்டாற்ற முயன்று வருவதாகவும், தன் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
![ரவுடி ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-rowdyarrest-script-7202290_28072021173345_2807f_1627473825_236.jpg)
மேலும், தன் மீதுள்ள வழக்குகளுக்கு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி விடுதலைபெற்றுக் கொள்வதாகவும், இனி எந்த ஒரு குற்றச் செயல்களிலும் ஈடுபடபோவதில்லை எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இனி தன் குடும்பத்திற்காக வாழவிருப்பதாகவும் மனுவில் அவர் கூறியுள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கல்வெட்டு ரவியை காவல் ஆணையர் பல்வேறு அலுவல் காரணங்களால் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் தனது மனுவை ஆணையர் அலுவலகத்தில் ரவி சமர்பித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் ரவுடிகளை ஒழிக்க அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திரபாபு