கரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில் தொற்று பரவல் குறைந்ததையடுத்து நேற்று (ஜுன்.20) புதிய ஊரடங்குத் தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (ஜுன்.21) முதல் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மெட்ரோ ரயில் சேவைகள் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயிலில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.
பரங்கிமலை - சென்ட்ரல் மெட்ரோ இடையே இன்று (ஜுன்.21) முதல் திங்கள்கிழமை முதல் உச்ச நேரங்களில் (Peak hours) காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: எவை எவைக்கு அனுமதி