சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 20, 21 ஆகிய தேதிகளில் அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகர் அம்மா அரங்கில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் குலுக்கல் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட உள்ளது.
மெரினா கடற்கரையில் ஏற்கனவே, வியாபாரம் நடத்தி சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்கள் வகை “அ” என்ற அடிப்படையில், 900 கடைகளில் 60 விழுக்காடு கடைகள் என 540 கடைகளும், ஏனைய கடை நடத்த விருப்பமுள்ளவர்கள் வகை “ஆ” என்ற அடிப்படையில் 40 விழுக்காடு கடைகள் என 360 கடைகளும் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
“அ” வகையில் 1, 351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு 1, 348 விண்ணப்பங்களும், “ஆ” வகையில் 14, 827 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு 12, 974 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் விவரங்கள் சென்னை மாநகராட்சி வருவாய் துறை தலைமையகம், 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகத்திலும், சென்னை மாநகராட்சி இணையதளத்திலும் (www.chennaicorporation.gov.in) 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நீதியரசர் முன்னிலையில் சென்னை-30, ஷெனாய் நகர், A பிளாக், 12ஆவது தெரு, கிரசென்ட் விளையாட்டு திடல் அருகில், சென்னை
மாநகராட்சி அம்மா அரங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 20ஆம் தேதி காலை 11 மணி முதல் குலுக்கல் முறையில் “அ” வகையில் 540 நபர்களும், பிற்பகல் 3 மணிக்கு “ஆ” வகையில் 360 நபர்கள் என மொத்தம் 900 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தொடர்ந்து 21ஆம் தேதி அன்று காலை 11 மணி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கப்படும். எனினும் மேற்படி 900 கடைகள் ஒதுக்கீடானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிறப்பு விடுப்பு மனு (SLP) மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வழங்கப்படவுள்ள தீர்ப்புக்கு உட்பட்டது என்ற நிபந்தனையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க... ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி