சென்னை: வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா ஒட்டிய கடற்பகுதிகளில் இன்று (ஜூலை 12) காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி), கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
ஜூலை.13: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை மத்திய மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
அரபிக்கடல் பகுதிககளில் இன்றுமுதல் 16ஆம் தேதிவரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்னல் வெட்டும்போது செல்பி எடுக்கலாமா?