தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சங்க பதிவு துறையின் அலுவலர் சேகர் என்பவரை சிறப்பு அலுவலராக நியமித்தது.
கடந்த ஒரு வருடமாக சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், தனி அலுவலர் நியமனத்தை ரத்து செய்து, ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விஷால் தரப்பிலும், ராதாகிருஷ்ணன் என்ற சங்க உறுப்பினர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி விசாரணையில் இருந்தது வந்தது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அலுவலராக மஞ்சுளா என்பவரை நியமித்திருப்பதாகவும், அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவார் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நடிகர் விஷால் தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலரை வைத்து தேர்தல் நடத்தக் கூடாது என்றும், ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அலுவலராக நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தையடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.