தமிழ்நாட்டில் சாலைகளில் வசிக்கும் வீடில்லா மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சை வழங்கவும் தனிக் குழு ஒன்றை அமைக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆன்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் தாக்கத்திலிஇருந்து சாலைகளில் வசிக்கும் ஏழை மக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை கட்டணமாக 2,250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எளிதில் பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக, பரிசோதனைக் கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு காணொளி காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, மனுவுக்கு விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை இருப்பில் உள்ளன? கூடுதல் பரிசோதனைக் கருவிகள் வாங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!