சென்னை மயிலாப்பூர் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்தின் பெயரில் இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்யும் கல்லூரி மாணவர் உள்பட இருவரிடம் விசாரணை நடத்தியபோது, சேப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரியும் முகமது அனீஸ் என்பவரிடம் இருந்து போதைப்பொருள்களை வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
அந்த விடுதியில் சோதனை நடத்தியதில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகமது அனீஸுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது என்று விசாரணை நடத்தியபோது, விடுதியின் உரிமையாளர் தமீம் அன்சாரி என்பவர் மூலம் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் இளையான்குடியில் தமீம் அன்சாரி இருப்பதையறிந்து தனிப்படை காவல்துறையினர் அவரை பிடிக்க அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே முகமது அனீஸ், முகமது மடன், கல்லூரி மாணவர் சபீர் அகமது ஆகியோரை மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்திய பிறகு சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தமீம் அன்சாரி குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களால் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. மும்பையில் இருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் தமீம் அன்சாரி உள்பட மூன்று பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது சூளைமேட்டில் உள்ள குடோனில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சூடோபெரின் என்ற போதை மருந்தையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் மயிலாப்பூரில் இப்படிப்பட்ட போதை விற்பனை செய்யும் கும்பலுக்கு, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து பார்சல் மூலம் போதைப்பொருளை தமீம் அன்சாரி கொண்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த போதைப்பொருள் அனைத்தும் இந்தியாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து சர்வதேச போதை கும்பல் மூலம் பார்சலாக கடத்தி வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தமீம் அன்சாரி கைது செய்தால்தான் அடுத்தக்கட்டமாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க முடியும் என்ற அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: மயிலாப்பூரில் ஒருவர் கைது!