சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலேயே 11ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக அழைத்துச்செல்ல முடியாத சூழலில் இந்தாண்டில் தேசிய கல்விச் சுற்றுலாவிற்கு சண்டிகர், சிம்லா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்குச்செல்ல சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சண்டிகர் விரைவு ரயில் மூலம் 40 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 50 மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாணவர்களுக்கு இனிப்புகள், உணவுகள், குளிர்பானங்களை வழங்கி வாழ்த்துதெரிவித்து அனுப்பிவைத்தார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக உதவிக்கல்வி அலுவலர் தலைமையில் 5 ஆசிரியர்கள் மாணவர்களுடன் செல்கின்றனர்.
இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச்சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இதையும் படிங்க: 'வருது வருது..' - ட்விட்டரில் இனி ப்ளூ டிக் பயன்படுத்த சுமார் ரூ.1600 கட்டணம்!