திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் இயந்திரக் கழிவுப் பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலை அம்சங்களுடன்கூடிய உருவ பொம்மைகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “இயந்திரக் கழிவுப் பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலை அம்சங்களுடன்கூடிய உருவ பொம்மைகளை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டது.
அவர்களின் உதவியுடன் 16 வகையான உருவங்கள் கலாசாரத்தைப் பறைசாற்றும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விவசாயி, மீனவர்கள், இயற்கையான பருந்து, மான் உள்ளிட்ட பல்வேறு வகையாக உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்தச் சிலைகளை நிறுவுவதற்கு முன்னர் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 15 நாள்கள் திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன.
இவை சென்னையின் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட இருக்கின்றன. பொதுமக்கள் குறைந்த அளவில் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த உலோகச் சிற்பங்கள் அமைக்கப்பட உள்ளன.
கரோனாவால் கடந்த ஒரு ஆண்டில் உலகம் பல்வேறுவிதமான சிரமங்களை அனுபவித்துள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் தியாகங்களை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அடுத்து ஒரு திட்டம் உருவாக்கப்படும்” எனக் கூறினார்.