சென்னை: வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகள் கனமழையில் சிக்கி நீரில் தத்தளித்து வருகின்றன. நீர் சூழ்ந்த இடங்களில் சீரமைப்புப் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆலந்தூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புப்பகுதியில் வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. தேங்கிய நீரை மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மறுபுறம் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தூய்மைப்பணியில் ஊழியர்கள் சுகாதாரப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட 156ஆவது வார்டு பகுதியில் தேங்கிய மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டது. தண்ணீருடன் அடித்துச்செல்லப்பட்ட மாடு மழைநீர் வடிகாலில் சிக்கி வெளியே வர முடியாமல் போராடியது. இதைக் கண்ட தூய்மைப்பணியாளர்கள் சட்டென வடிகாலில் சிக்கிய பசுவை மீட்டனர்.
தூய்மைப்பணியாளர்கள் பசுவை வடிகாலில் இருந்து மீட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்குத்தடை