சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 397 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூபாய் 397 கோடி அளவிலான மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதி செய்ததும் எப்படி ஊழல் நடந்ததும் என்பதற்கான ஆதாரங்களையும் வைத்துள்ளோம்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த ஊழலை வீட்டில் இருந்தே டெண்டர் அதிகாரியான காசியை வைத்து செயல்படுத்தியதற்கான முகாந்திரங்களையும் அறப்போர் இயக்கம் சார்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாராக கொடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் 2021 அக்டோபர் மாதம் கோரப்பட்டு நவம்பர் மாதம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம் இந்த ஒவ்வொரு டெண்டரிலும் இவர்கள் செய்த மிக முக்கியமான கூட்டு சதி என்பது கிட்டத்தட்ட 30 ஒப்பந்ததாரர்களை ஒவ்வொரு டெண்டரிலும் ஒரு ரூபாய் கூட மாறாமல், அதே தொகைக்கு ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளனர்.
டெண்டர் போடுவதற்கு முன்பாகவே அனைத்து ஒப்பந்ததார்களும் ஒன்று சேர்ந்து ஒரே தொகைக்கு கோர முடிவு செய்துள்ளனர். இதைப் பார்த்த உடனேயே இதில் மிகப்பெரிய கூட்டுசதி உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த டெண்டர்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், டெண்டர் ஆய்வுக்குழுவும் இந்தக் கூட்டு சதியில் உள்ளது என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் 2021-22-க்கான விலைப்பட்டியலில் டிரான்ஸ்ஃபார்மரின் விலை 7,89,750 என்று குறிப்பிட்டுள்ளது. சந்தை மதிப்பை விட ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மரும் 4 லட்சத்திற்கும் மேலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒரு ஒப்பந்தத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 34 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஊழலுக்கான மிக முக்கியப் புள்ளியாக திகழ்பவர், மின்சார வாரிய பொது ஊழியரான காசி என்னும் கொள்முதல் பைனான்சியல் கண்ட்ரோலர். இவர் மின்சார வாரியத்திற்கு வேலைக்குச் செல்லாமல் தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்து தான் மின்சார வாரிய டெண்டர்களை இவர் நிர்ணயம் செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அவர் சில நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்குச் செல்லும் போட்டோ ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம்.
காசி கடந்த ஆட்சியில் பொதுநலனுக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதற்காக செப்டம்பர் 2020இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு கட்டாய ஓய்வுக்கான நோட்டீஸை மார்ச் 2021ல் அப்போதைய மின்வாரிய இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் கொடுத்தார். காசி இதன் மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றால் அவர் மின்சார வாரிய போர்டு விதிகள்படி மேல்முறையீடு செய்ய வேண்டும்.
ஆனால், ஆட்சி மாறியவுடன் ராஜேஷ் லக்கானி மின்சார வாரியத் தலைவர் மற்றும் இயக்குநர் ஆனவுடன் காசியின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவரை மீண்டும் வேலையில் சேர்த்துள்ளார். கட்டாய ஓய்வு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஒருவரை விதிகளை மீறி ராஜேஷ் லக்கானி மீண்டும் பணியமர்த்தி உள்ளார். மேலும் கடந்த செப்டம்பர் 2021-ல் காசியை கொள்முதலுக்கான பைனான்சியல் கண்ட்ரோலராக பணியமர்த்தியுள்ளார். இதன் பின்னர் தான் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் மிகப்பெரிய ஊழலை அரங்கேற்றுகிறார்கள்.
காசி தினமும் அமைச்சர் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து தான் செயல்படுகிறார் என்றால், இது அமைச்சர் செந்தில் பாலாஜியும் காசியும் எவ்வளவு நெருக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதையும்; அவர்கள் சேர்ந்து இந்த சதியை இயக்கியிருக்கிறார்கள் என்பதற்கான முகாந்திரமாக அமைகிறது. எனவே, இந்த முகாந்திரத்தை வைத்து செந்தில் பாலாஜியையும் விசாரிக்க வேண்டும்'' என்று அறப்போர் இயக்கம் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ''இந்த மாபெரும் ஊழலில் காசி, மற்ற டெண்டர் ஆய்வுக் குழு அதிகாரிகள், போட்டி போட்டு ஒரே விலை கொடுத்த நிறுவனங்கள், இயக்குநர் ராஜேஷ் லக்கானி, அமைச்சர் செந்தில் பாலாஜி என அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று இன்றைய தினம் புகார் கொடுத்துள்ளோம்.
இதுபோன்ற மின்சார வாரிய ஊழலால் தான் மின்சார வாரியம் மிகப்பெரிய கடனில் ஆழ்ந்துள்ளது. இந்த ஊழல்களினால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய அரசு ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய வரிப்பணத்தை மின்சார வாரியத்திடம் கொடுத்து மக்கள் திட்டங்களுக்கு அந்தப் பணம் செலவிட முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த ஊழல் நிர்வாகச் சீர்கேட்டினால் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் பொதுமக்கள் மீது தான் நேரடியாக வைக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஊழல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்'' என அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க :திமுகவில் இளைஞர் அணி பதவி நியமனம்; தனது ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டிய தருமபுரி எம்.பி.