சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் இம்மானுவேல் தாக்கல் செய்துள்ள மனுவில், ”இந்தியாவில் மார்ச் 25-இல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, படிப்படியாக நீட்டித்து மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருவாய் இழந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடந்து அம்மனுவில், தன்னைப் போல குறைவான வருவாய் ஈட்டுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்த நிலையில், தென் கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே வைரஸ் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அது நம்முடன்தான் இருக்கும் என்பதால், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசு விதித்துள்ள நிபந்தனைகளை கடைப்பிடித்தாலே வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளலாம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன், ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது என சாடினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!