சென்னை: கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இலங்கை நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த உதயகுமார் என்பவர், தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இவர் மெத்தம்பெட்டமைன் என்கிற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், உதயகுமார் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில், 2 கிலோ மெத்தம்பெட்டமைன் என்கின்ற போதைப்பொருள் சிக்கி உள்ளது. எனவே, உடனடியாக உதயகுமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர், போதைப்பொருளை சப்ளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அக்பர் அலிக்குச் சொந்தமான இடங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அதில் 54 கிலோ மெத்தம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக கடத்தி வந்ததும், அதனை இலங்கை நாட்டிற்கு கடத்தப்பட இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இருவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.128 கோடி இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த ஆண்டு மட்டும் சுமார் 65 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பவுடர் மற்றும் 3,338 கிலோ கஞ்சா உள்ளிட்டவைகளை இலங்கைக்கு கடத்த முயன்றபோது பறிமுதல் செய்துள்ளதாகவும், இவைகளின் மதிப்பு சுமார் ரூ.280 கோடி இருக்கும் எனவும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இளம் விஞ்ஞானிகள் பயிற்சிப் பட்டறை; அலைக்கற்றைகளை கண்காணிப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி செயல் விளக்கம்!