சென்னை: அரசு, அரசு சார்ந்த துறைகள், தொழிற்சாலைகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை மாணவர்கள் வடிவமைக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சகத்தின் புத்தாக்க பிரிவு (Ministry of Education's innovation cell) மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) இணைந்து ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (smart India Hackathon) எனும் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.
இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் மூலம், ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு உலகின் நிகழ்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மேடை அமைத்துத் தருவதோடு, மாணவர்கள் தொழில்நுட்ப புதுமைகளைக் கண்டறியவும், தொழில் முனைவு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.
நாடு முழுவதிலும் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த 47 உயர்கல்வி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறையில் உள்ள நான்கு முக்கிய சிக்கல்களுக்குத் தீர்வினை கண்டறிய மாணவர்களுக்குள் போட்டி நடைபெற்றது. இதில், நாடு முடிவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 19 அணிகளாகப் பங்கேற்றனர். நான்கு சிக்கல்களுக்கும் தீர்வினை அளித்த மாணவர்கள் அணிக்கு தலா ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இது குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் சேர்மன் ஶ்ரீ ராம் கூறியதாவது, "இது போன்ற போட்டிகள், தேர்வில் மட்டும் தேர்ச்சி பெறுவது மட்டுமே படிப்பு அல்ல என்பதை மாணவர்களுக்கு நினைவு படுத்தும் என்றும், சமூகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மாணவர்களின் கண்டுபிடிப்பு மூலம் தீர்வை பெற்றுத் தரும் இது போன்ற போட்டிகள் மாணவர்களை ஊக்குவிக்கும் என்றும், வரும் காலங்களில் தொழில் முனைவோராக மாற்ற உதவும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெள்ள நிவாரணம் வழங்குங்கள்.. 72 பக்க மனுவை மத்திய நிதி அமைச்சரிடம் கொடுத்த தமிழக அரசு..!