சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி கலந்து கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.
திசை திருப்பும் செயல்
தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரப்பட்சம் காட்டுகிறது. அந்த வகையில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீட் வேண்டாம்
நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நீட் தேர்வு கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. மத்திய அரசு தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தமீம் அன்சாரி, இன்று 100 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சங்கரய்யாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தோழர் சங்கரய்யா