சென்னை, ஆவடியை அடுத்த பட்டாபிராம், எம்.ஜி சாலையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). இவர் சி.டி.எச் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் ஏழாம் தேதி இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு இவர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, ஜூன் எட்டாம் தேதி காலை கடையை திறக்க வந்தப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து, கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ஐந்து விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனதை அடுத்து, பாலமுருகன் பட்டாபிராம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையின் ஷட்டர் உள்ளிட்ட இடங்களில் பதிவான கொள்ளையர்களின் கை ரேகைகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலரை தாக்கிய தந்தை மகன் கைது!