சென்னை: முகலிவாக்கத்தில் பெண்கள் விடுதி நடத்தி வந்த பெண் உரிமையாளர் மீது சரிமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, முகலிவாக்கம் கிருஷ்ணவேணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். சொந்தமாக தொழில் நடத்தி வரும் இவருக்கு கணபதி ஜானகி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சுரேஷின் மனைவி முகலிவாக்கம் பகுதியில், பிங்க் மகளிர் தங்கும் விடுதி ஒன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்த விடுதியில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா காலத்தில் இவர்களுக்கு தொழிலில் நஸ்டம் ஏற்பட்டு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவன் என்பவர் விடுதி நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார். நம்பிக்கை காரணமாக கணக்கு வழக்குகளையும் பரமசிவனிடம் கணபதி ஜானகி ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வரவு செலவு கணக்குகளில் பிரச்சினை இருப்பதாக கணபதி ஜானகிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் மாத வாடகை கொடுப்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பரமசிவன் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார் என்று கூறினர்.
இதுகுறித்து பரமசிவனிடம் கணபதி ஜானகி கேட்டுள்ளார். அதற்கு இந்த விடுதியை நான்தான் நடத்த போகிறேன். ஏதாவது பிரச்சினை செய்தால் இல்லாமல் செய்து விடுவேன் என கூறி தகாத வார்தையில் திட்டியுள்ளார்.
இந்நிலையில் கணபதி ஜானகி நேரடியாக விடுதிக்கு விடுதி அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த பரமசிவன், கணபதி ஜானகியை கண்மூடித்தனமாக அடித்தும், கழுத்தை நெறித்தும், எட்டி உதைத்தும் கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சியானது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணபதி ஜானகி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மாங்காடு மகளிர் போலீசார் முதல் தகவல் அறிக்கை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, கணபதி ஜானகியின் மகனை பரமசிவன் மனைவி தகாத வார்த்தையில் போனில் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. பரமசிவனை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக இருப்பதாகவும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணபதி ஜானகி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கருகும் சம்பா சாகுபடி; கடைசி நம்பிக்கையையும் இழக்காத விவசாயிகள்.. குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றும் அவலம்!