சென்னை: பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர், தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
அதில் 'பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர்' என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். 'பறையர்' என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன.
இந்த நிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது பதிவால் சாதி, மத கலவரத்தைத்தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், காவல் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் வழக்குத்தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை இன்று (நவ.7) விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுவில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை எனக் கூறி, காசியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: EWS 10% இடஒதுக்கீடு என்பது, ஏற்கெனவே இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டை பாதிக்காது - அண்ணாமலை