சென்னை : ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் பிப். 11ஆம் தேதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "ஆதம்பாக்கம் கிராமத்தில் எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 22 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பட்டாவானது வேறொருவரின் மீது முறைகேடாக இருந்ததால், ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன்.
இதனையடுத்து, அந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தனது பெயருக்கு பட்டாவானது மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தின் சர்வேயர் கிஷோர், அவரது உதவியாளர் சண்முகம் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு, எனது நிலத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனால்ஸ, தாசில்தாருக்கு மூன்று லட்சம் ரூபாய், சர்வேயருக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறினார்.
பணம் தரவில்லையென்றால் வேறு நபருக்கு பட்டாவை மாற்றிவிடுவோம் எனவும் மிரட்டினார். இவர்கள் என்னை பணம் கேட்டு மிரட்டியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால் மனமுடைந்து இருந்தபோது தனது நண்பரின் ஆலோசனைப்படி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனை அழைத்துக்கொண்டு சர்வேயரிடம் சென்றனர். அப்போது, முருகன் சர்வேயர் கிஷார்ரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க, அதை வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து, செல்போன் ஆதாரங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாசில்தார் சரவணன், சர்வேயர் கிஷோர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்யாதது ஏன்? - புகழேந்தி