சென்னை: சட்டமேதை அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (ஏப். 14) மாலையிட்டு மறியாதை செலுத்தினார். இதையடுத்து சிலைக்கு அருகேயிருந்த கம்பத்தில் விசிக-வின் கொடியைக் கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் அதே சிலைக்கு மாலையிட வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்காரணமாக பாஜக தொண்டர்கள் விசிக கொடியை நீக்கிவிட்டு, பாஜக கொடியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் விசிக-பாஜக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது கற்களை வீசி மோதிக்கொண்டனர். இந்த மோதலில் பாஜகவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், செந்தில், காவலர் ஒருவர் என மூன்று பேரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட விசிக தொண்டர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 50 பேர் மீதும், விசிக நிர்வாகிகள் 30 பேர் மீதும் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் விசிக மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 சட்டவிரோதமாக கூடுதல், 148 ஆயுதங்களுடன் கூடுதல், 324 காயம் விளைவித்தல், 294b ஆபாசமாக பேசுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலையிடும்போது விசிக - பாஜக மோதலால் பரபரப்பு!