சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் இசைக் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வன் நேற்று இரவு 11மணி அளவில் தனது காரில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வடபழனி காவல் நிலையம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் மயில்சாமி தலைமையிலான காவல்துறையினர், குடிபோதையில் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அன்புச்செல்வன் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்து அபராதம் விதித்து, அதற்கான ரசீதை அவரிடம் காவலர்கள் வழங்கினர்.
மேலும், காரின் ஒரிஜினல் ஆர்.சி புத்தகம், லைசென்ஸ் ஆகியவற்றை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு அன்புச்செல்வனிடம் காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்து சென்ற அன்புச்செல்வன் சிறிது நேரம் கழித்து, வேறு ஒரு மாற்று சாவியை போட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார்.
காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்த காரை மாற்று சாவி போட்டு அதன் உரிமையாளர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வடபழனி சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர், அன்புச்செல்வனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த மாருதி 800!