சென்னை: அம்பத்தூரில் சாலை ஓரம் நிறுத்தி இருந்த வாகனங்கள், நின்றிருந்த இளைஞர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பத்தூர் அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அப்போது அம்பத்தூரில் இருந்து ரெட் ஹில்ஸ் நோக்கி அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாகனங்கள் மீது மோதி அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சாலை ஓரம் நின்றிருந்த ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணதாசன் மற்றும் முகமது சுனில் என்பவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முகமது சுனில் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் கண்ணதாசன் என்பவர் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கட்டுப்பாடு இல்லாமல் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் மில்லர் என்பவரை ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் தாக்கினர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு போலீசார் வந்த நிலையிலும், முகமது சுனிலின் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் போலீசார் முன்னிலையிலே ஜார்ஜ் மில்லர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் ஆத்திரத்தில் இருந்த இளைஞரின் உறவினர்கள், பொதுமக்களிடம் போலீசார் சுமூகமாக பேசி இளைஞரின் உடலை மீட்டு, விபத்து ஏற்படுத்திய ஜார்ஜ் மில்லரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் சுனில் தாங்கள் புதியதாக திறக்க இருந்த பேட்டரி கடையை சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல சாலையோரம் நின்று கொண்டிருந்து உள்ளார். அப்பொழுது தான் இளைஞர் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற முகமது சுனில் உயர் கல்விக்காக பிரபல தனியார் கல்லூரியில் சேர்க்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முகமது சுனிலின் தாய் சம்பவ இடத்தில் உயிரிழந்த மகனின் உடலை கட்டி அணைத்து கதறி அழுததும், தந்தை என் மகனை நீங்களா திருப்பி கொடுப்பீர்கள் என போலீசாரிடம் மன்றாடியதும் பொதுமக்களை கலங்கச் செய்தது.
இதையும் படிங்க: Chennai Power Cut: இரவு நேர மின்தடை - போராட்டக் களமாக மாறிய அம்பத்தூர் சாலை!