ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வருபவர்களை, போதை பொருள் நுண்ணறிவு காவல் துறையினர் கைது செய்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். அதேபோல், மதுரவாயல் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா அதிகளவில் விற்பனை நடைபெறுவதாக போதைபொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் டிஎஸ்பி ரியாசுதீன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை செய்ததில் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நசீர் (35) என்பவர் தொடர்ந்து ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி ரயில், பேருந்துகள் மூலம் கடத்தி வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, நசீரின் செல்போன் எண்ணை டிராக் செய்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனையறிந்த நசீர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், விசாகபட்டினம் பகுதியிலிருந்து ரயில் மூலமாக நசீர் கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் நுண்ணறிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், நசீரை நேற்றைய முன்தினம் (ஜன.28) கைது செய்தனர். அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விசாகப்பட்டினம் பகுதியிலிருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து சென்னையில் கஞ்சா வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் நசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் ஆறு மாதங்களாக தீவிரமாக கண்காணித்து கஞ்சா வியாபாரியை கைது செய்த போதைபொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரை, உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது!