திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் மகன் சுஜித் வில்சன் (2).
2019ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி சுஜித் தனது வீட்டின் அருகே இருந்த மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தார். சுஜித்தை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஐந்து நாள்களாகத் தொடர்ந்து பணியாற்றிவந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக அக்டோபர் 29ஆம் தேதி 88அடி ஆழத்திலிருந்து சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இதையடுத்து பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், திரை பிரபலங்கள் சுஜித்தின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியும் நிதி உதவி வழங்கியும் வந்தனர். சுஜித் மறைவுக்குப்பின் தமிழ்நாட்டில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் சுஜித் மறைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுஜித் மரணத்தை நினைவுகூரும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சுஜித், மீண்டு வருவாய் எனக் கோடானுகோடி பிரார்த்தனைகளைப் புறந்தள்ளி புதைந்துபோன கறுப்பு நாள் இது. ஊண் உறக்கமின்றி உனக்காக உறுதியோடு காத்திருந்த எங்களைக் கண்ணீரில் மூழ்கவைத்து நீ மறைந்துபோனது மாளாத சோகமாய் மனத்தில் இருக்கிறது! மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.