சென்னை: சிறுபான்மை மக்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திப் பாதுகாப்பு வழங்கவும், அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் (ஜூன் 6) தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசிய போது, "நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வர உள்ளது. ஆனால், இதைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் மக்களுக்குச் சோதனையும், துயரமும்தான் கிடைக்கிறது. மத்தியில் உள்ள பாஜக அரசு இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கின்றனர்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் நபிகள் நாயகம் குறித்து பேசிய வெறுப்புப் பேச்சைப் பார்த்தோம். இப்படி பேசுவதற்கான தைரியத்தை யாா் கொடுத்தது என்பதுதான் கேள்வி. பாஜக அரசு பாகுபாட்டோடு வரலாற்றைப் பார்க்கிறது. வெறுப்பு அரசியலின் பாதுகாவலர்களாக மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், மதவெறியைத் தூண்டிவிட்டு, வன்முறைக்கு இடமளிக்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. அப்படியானால் மதவெறியைத் தூண்டிவிட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை. பாஜக வெறுப்பு அரசியலைச் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சி.பி.ஐ.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நலக்குழுவின் தலைவர் எஸ்.நூர்முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.