சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "இன்று காலையில் இருந்து நாங்கள் கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்டதற்கு உண்ணாவிரதம் இருந்து கண்டன உரையை நிகழ்த்தியுள்ளோம். திமுக கவுன்சிலர் ஒருவர் கிருஷ்ணகிரியில் ஓய்வுக்காக வந்த ராணுவ வீரரை படுகொலை செய்துள்ளார்.
இதற்கு நம்முடைய முதலமைச்சர் கண்டன குரல் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஏழு பேருடன் நானும் சேர்ந்து ஆளுநரை சந்திக்க இருக்கிறோம். இவர்களுடைய மனக்குமுறலை ஆளுநரிடம் கொட்டி தீர்த்து இருக்கிறார்கள். நாங்களும் பாஜக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்க இருக்கிறோம்.
கொலை சம்பவம் நடந்த போது தமிழ்நாடு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவின் அழுத்தம் காரணமாக குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதை விட மேற்கு வங்கத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. முதலமைச்சர் எதுவும் பேசாமல் தன்னைத் தானே எவ்வளவு நாள் ஏமாற்றிக் கொண்டிருப்பார். கோவையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பணியை சரியாக செய்யவில்லை.
தேர்தல் தொடர்பாக அதிமுக தொடுத்த வழக்கிற்கு தேர்தல் முறையாக நடப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை உடனடியாக வழங்க இருக்கிறோம். அதையும் தாண்டி அவர்களுடைய இரண்டு குழந்தைகளின் கல்விக்கான செலவை பாஜகவே ஏற்கும். இது தவிர பாஜக அவர்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க மறுக்கும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீ சீதாராம் பள்ளியை ஏற்று நடத்துவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு