சென்னை: தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக, அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் இன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்தியலிங்கம், ’அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ராஜ்ய சபா தேர்தலுக்கு பாஜகவின் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்து இருந்தார்கள். அதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து கொடுத்துள்ளோம். அவரும் தமிழ்நாடு பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்’ எனத் தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, "மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கே", என உறுதியளித்தார்.
இதற்கு முன்னதாக பாமக தலைவர் ஜி.கே.மணி மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம்