குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை மிரட்டும் வகையில் சர்ச்சையான சில கருத்துகளை தெரிவித்திருந்தார். நெல்லை கண்ணன் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து அவரை கைதுசெய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சிட்டி சென்டர் அருகில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்கு அவர்கள் அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர்.
நெல்லை கண்ணனுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு - பொன்.ராதாகிருஷ்ணன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ”நெல்லை கண்ணன் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கியவுடன் காவல்துறையினர் அவரை கைது செய்திருக்க வேண்டும். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்யவேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு ஆணை இடுவது போல் பேசியிருப்பதால் , பயங்கரவாதிகளுக்கும் நெல்லை கண்ணனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும்” என்றார்.
75 வயது ஆகிவிட்டால் நாக்கு நீளுமா? - ஹெச். ராஜா
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ‘75 வயதாகி உடல்நலம் இல்லாமல் இருக்கும் நெல்லை கண்ணனை, 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டுமென கூறுகிறீர்களே?’ என செய்தியாளர் தரப்பில் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு கோபத்துடன் பதிலளித்த ராஜா, ”75 வயது ஆகிவிட்டால் நாக்கு இவ்வளவு நீளுமா? பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சோலியை முடித்துவிட வேண்டுமென பேசியிருப்பது சரியா?, இந்த அயோக்கியனை கைது செய்ய வேண்டும்.” என்றார் ஆவேசமாக.
கோவையில் சாலை மறியல்
இதேபோன்று நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி கோவை காந்தி பார்க் பகுதியில் திடீரென பாஜகவினர் 27 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்!