பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜ், பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு காவல் துறை டிஜிபி திரிபாதியை சந்தித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் டிஜிபியை சந்தித்துவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே பாஜக நிர்வாகிகள் அங்கு வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெற்றிவேல் யாத்திரை 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்குகிறது. அதற்காக அனுமதி கேட்டு ஏற்கனவே டிஜிபியிடம் மனு கொடுத்தோம். அதனை நினைவூட்டும்விதமாக இன்று (அக்டோபர் 30) மீண்டும் சந்தித்துள்ளோம்.
எங்களின் உரிமையை தடுக்க திருமாவளவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. யாத்திரையின்போது 60 இடங்களில் பாஜக தலைவர் முருகன் பொதுமக்களிடையே பேச உள்ளார். தமிழ்நாட்டை மீட்டு எடுக்கும் இந்த யாத்திரை அரசியல் மாற்றத்தை தரும்.
இந்த யாத்திரைக்கு காவல் துறை அனுமதி மறுக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு தேர்தலை குறிவைத்துதான் இந்த யாத்திரை. இது சாதாரண தேர்தல் யாத்திரை மாதிரி இருக்காது. அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகு சில தளர்வு வரலாம்.
மதச்சார்பற்ற கட்சி பாஜக. திமுகவிடம் அது இல்லை. பாஜகவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் என்றைக்கும் நடிகர் ரஜினி எங்கள் கட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. வந்தால் வரவேற்போம் என்றுதான் கூறினோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். ரஜினி வந்தாலும் வராவிட்டாலும் பாஜகவை எந்த விதத்திலும் பாதிக்காது.
எம்ஜிஆர் ஏழை மக்களுக்காகப் பாடுபட்டவர். பிரதமர் மோடியும் ஏழை மக்களுக்காகப் பாடுபட்டுவருகிறார். எம்ஜிஆரைப் பழித்துப் பேசியது இல்லை. வன்முறைக் கட்சி எது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று கூறினார்.