கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியின் அமைந்துள்ள, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சையால், 17 வயதான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம். அரசு மருத்துவமனையில் நிலவும் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என்றதும், அரசு மருத்துவமனை கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து. நாட்டின் சொத்தை பாதுகாக்க தவறியதற்கு, தமிழக அரசும், தமிழக மருத்துவத்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்!