சென்னை: மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லெனின் பிரசாத், “மணிப்பூரில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் சீண்டுதல் செய்த காணொளி நாட்டையே உலுக்கியுள்ளது.
பாஜக தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் இட வேண்டும். மணிப்பூரில் முதலமைச்சர் இந்த கலவரத்தை தடுக்க தவறியதற்கு அவரை குடியரசு தலைவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூர் கலவரத்திற்கு தொடர்ந்து பாஜக துணை போகின்றது. அவர்கள் திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தி வருகின்றனர். உங்களுக்கு ஆட்சி காலமாக இருக்கின்ற ஆறு மாத காலத்திலாவது மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கக்கூடிய குஷ்பூ மற்றும் அகில இந்திய பாரதிய ஜனதா பெண்கள் அணியின் தலைவியாக இருக்கக்கூடிய வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்” என சாடினார்.
மேலும், “பாரதிய ஜனதா திட்டமிட்டு இந்த கலவரத்தை நடத்தி வருவதால் இவர்களும் அவர்களுக்கு துணை போகின்றனர்” என குற்றம்சாட்டினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன், பொதுச் செயலாளர்கள் அருண் பாஸ்கர், அலெக்சாண்டர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ‘மோடியின் வெறுப்பு அரசியல்தான் மணிப்பூர் கலவரத்திற்கு காரணம்’ - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!