பாஜகவைச் சேர்ந்த திருமலைசாமி தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
'திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், பாஜக லோகோவை (சின்னத்தை) திருடி எங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் போல் அவதூறாக சித்திரித்து, நெல்லை மற்றும் வேலூர் மாவட்ட திமுகவின் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டச் செயலாளர்கள், சோனியா என்ற பெண்ணின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்துள்ளனர்.
இந்த போலி தேர்தல் வாக்குறுதிகளை பல ஆயிரம் பேருக்கு பரப்பியும் உள்ளனர். திமுக எங்கள் கட்சியிடம் கொள்கை ரீதியாக நேரடியாக மோத வழியில்லாமல், தோல்வி பயத்தில் நாங்கள் கூறாத சில விஷம கருத்துகளை எங்களின் தேர்தல் அறிக்கையாக நாங்கள் வெளியிட்டது போல் எங்கள் கட்சியின் லோகோவை பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
எனவே, திமுகவின் மீதும், அக்கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.