சென்னை: அயனாவரம் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பிரியாணிக் கடை உரிமையாளர் நாகூர் கனி என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அயனாவரம் போலீசார் இந்த வழக்கில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய வியாசார்பாடியைச்சேர்ந்த கரண்குமார் என்பவனை தனிப்படை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்ட எர்ணாவூர் உமர் பாஷாவும், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நாகூர் கனியும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளிகளாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே கூட்டணியில் இருந்தாலும் சில ஆண்டுகளாகவே உமர் பாஷாவுக்கும், நாகூர் கனிக்குமிடையே இயல்பான உறவு இல்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் உமர் பாஷா எர்ணாவூரில் மசூதியில் இருந்து வெளியே வரும் போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டாலும், உமர் பாஷாவை கொலைக்கு நாகூர் கனிதான் தான் காரணம் எனத் தெரியவந்தது. இதனால் நாகூர் கனியை கொலை செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருந்த உமரின் தம்பி ஹுசைன் மற்றும் அவரது மைத்துனர் ஜீலன், நேற்று முன்தினம் கூலிப்படை உதவியோடு கொலை செய்ததும் தெரியவந்தது.
நாகூர் கனியைக்கொலை செய்த நபர்களைப்போலீசார் தேடி வந்த நிலையில் இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச்சேர்ந்த ஜீலன், கோடம்பாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆசை, வடபழனி பகுதியைச்சேர்ந்த அகஸ்டின், நீலாங்கரை பகுதியைச்சேர்ந்த அஜித்குமார் ஆகிய நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் இதுவரை 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான ஹுசைன் உட்பட பலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயக்குமார் போகும் கன்னித்தீவு கொளத்தூர் அல்ல - அமைச்சர் கே.என்.நேரு