நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வசூலை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து வருமானவரித் துறை புலனாய்வு அலுவலர்கள், ‘பிகில்’ பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 38 இடங்களில் கடந்த 5ஆம்தேதி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை அலுவலர்கள், தொடர்ந்து அவரிடம் இரண்டு நாட்கள் விடிய விடிய விசாரணை நடத்தினர். சோதனைக்கு பிறகு விஜய் வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு சென்றார்.
இந்நிலையில், 4 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது நண்பருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 1 1/4 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட முக்கியமான ஆவணங்கள் மற்றும் சொத்துக்களின் விபரம் ஆகியவற்றை வருமான வரித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் அன்புச்செழியன் சுமார் 165 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
'பிகில்' திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படும் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்துள்ளதாக பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புதல் அளித்துள்ளார் என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகிய மூவரும் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் மூன்று நாள்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 10ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து நடிகர் விஜய் உள்ளிட்ட மூன்று பேரும் இன்று வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ’மாஸ்டர்’ படப்பிடிப்பிற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாலும் இன்று நெய்வேலியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாலும் நடிகர் விஜய் ஆஜராகவில்லை. மேலும், நடிகர் விஜய் சார்பில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் கோரியுள்ளதாகவும் அவருக்குப் பதில் அவருடைய வழக்கறிஞரோ, ஆடிட்டரோ ஆஜராகவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
எனவே அவர்கள் நேற்று அலுவலர்கள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை நடிகர் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலர்களைச் சந்தித்து ஆவணங்களைச் சமர்ப்பித்து விளக்கமளித்தனர். இந்நிலையில், கடைசி நாளான இன்று (புதன்கிழமை) பிகில் படம் வசூல் தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பாக இரண்டு பேர் வருமானவரித் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியும் கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி முதன்மைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்ற பின்பு அவர் தாயரித்த முதல் படம் பிகில் என்பதால் அதன் அனைத்து விவகாரங்களையும் அவரே கவனித்து வந்துள்ளார். கடந்த வாரம் தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ். அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வழங்கப்பட்ட ஊதியம், படத்திற்குச் செலவு செய்தது தொடர்பான தரவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வருமானவரித் துறையினர் கைப்பற்றியிருந்தனர். அதை வைத்தே இன்றைய விசாரணையில் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமானவரித் துறை அலுவலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அதற்கு தனது ஆடிட்டருடன் ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: யோகிபாபுக்கு தங்க செயின் வழங்கிய 'கர்ணன்'