சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். இம்மாதம் 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக அந்த நிகழ்ச்சியை ஜனவரி 6ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. பின் இந்த நிகழ்ச்சி கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இன்று (டிச.26) மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வின் துவக்க விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், இணை செயலாளர் சௌந்தர பாண்டியன், பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, பேரரசு, லிங்குசாமி, நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், டி.ஜி. தியாகராஜன், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், சுவாமிநாதன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ளத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடிகர், நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்த வீடியோவும் ஒளிபரப்பப்பட உள்ளது.
இதையும் படிங்க: "நோட்டு - ஓட்டு இவற்றை நோக்கித்தான் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள்" - இயக்குநர் வீர பாபு..!