சென்னை: கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண்கள் ஹிஜாப் (முக்காடு) அணிந்து வரக்கூடாது என கர்நாடகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து தலை அங்கி அணிந்து வர பள்ளி, கல்லூரி மாணவியர்களுக்கு மாநில அரசு தடை விதித்தது.
மாநில அரசின் தடை உத்தரவை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், இஸ்லாமியர்களின் புனித நூலான "குரானில்" எந்த இடத்திலும் பெண்கள் ஹிஜாப் (தலை அங்கி) அணிவது கட்டாயம் என கூறவில்லை என தெரிவித்து, மாநில அரசின் உத்தரவை அமல்படுத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
![தலைமை நீதிபதிக்கு கோரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-policeprotectionsforjudges-script-7204624_22032022121720_2203f_1647931640_1110.jpeg)
இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சிலர் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். கடந்த 2021ஆம் வருடம் ஜார்க்கண்டில் சமூக விரோதிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது ஆட்டோ மோதி கொலை செய்தனர்.
இதனால், பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் மேல்முறையீடு செல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பது என்பது கண்டனத்திற்கு உரியது.
மேலும், கர்நாடக நீதிபதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இரிடியம் தொழில்... ரூ.1.80 கோடி மோசடி... துணை நடிகர் காவல் ஆணையரிடம் புகார்