சென்னை: பங்களாதேஷைச் சேர்ந்த அலிம் உட்டின் (65) என்பவர் அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அலிம் உட்டினுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அலிம் உட்டினை மருத்துவ சிகிச்சைக்காக அவருடைய மகன்கள் முகமது மகியுதீன், முகமது அப்சருதீன் இருவரும் பங்களாதேஷிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், சென்னையில் இருந்து வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தங்கி சிகிச்சைப் பெற்று வந்த அலிம் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அலிம் உட்டினை அழைத்துக் கொண்டு அவரது மகன்கள், கொல்கத்தா வழியாக விமானத்தில் பங்களாதேஷ் செல்வதற்காக, நேற்று(மே.1) இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர். சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கொல்கத்தா வழியாக பங்களாதேஷ் தலைநகர் டாக்கா செல்வதற்காக மூன்று பேருக்கும் டிக்கெட் எடுத்திருந்தனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்து விமானத்தில் ஏறுவதற்காகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அலிம் உட்டின் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து பதறிப் போன மகன்கள் இருவரும் விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன் தந்தையை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அலிம் உட்டினை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Tamil Nadu weather: தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!