சென்னை: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் குற்றஞ்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரைத் தாக்கி, அரை நிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், புகார் அளித்தவர் தற்போது நல்ல மனநிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையில் காயங்கள் எதுவும் இல்லை.
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காயமடைந்த நபர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று சென்று விட்டதால், கடுமையான நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் இரண்டு வாரத்திற்குக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.