கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 43 நாள்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்ட டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவனம், ஓசூர், மைசூர் மற்றும் ஹிமாச்சல் மாநிலம் நலகாரி ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தங்களது ஊழியர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கரை செலுத்துவதாகவும், அரசு அறிவுறுத்திய அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்றி வேலையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ராயல் எண்ட்ஃபீல்ட் நிறுவனம், ஒரகடத்தில் உள்ள தனது தொழிற்சாலையில் படிப்படியாக உற்பத்தியைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. திருவொற்றியூர், வல்லம் வடகல் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலையில் சில நாள்களுக்குப் பிறகு பணிகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
சென்னை, அதனைச் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு சில நிறுவனங்கள் படிப்படியாக தங்களது உற்பத்தியைத் தொடங்கி வருகின்றன.
கரோனா பெருந்தொற்றினால் அமலில் உள்ள தொடர் ஊரடங்கு காரணமாக, கடந்த மாத்தில் வாகன விற்பனை முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளது. அதேபோல, பிஎஸ் 6 நடைமுறை காரணமாக ஏராளமான வாகனம் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் தங்களது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடித்தக்கது.
இதையும் படிங்க : என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்