சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக, வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்நிலையில், அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் தொல்லியல்துறை ஏன் பதிலளிக்கவில்லை. தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும். அத்திவரதரை குளத்தில் இறக்கி வைத்தவுடன் அந்த அறையில் மட்டும் சுத்தமான தண்ணீரை நிரப்பலாம் என உத்தரவிட்டு இவ்வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.