சென்னை: தெலங்கானா ஆளுநரும் மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநரும் ஆன தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில், 'முரசொலி நாளிதழில் ஆளுநர்கள் பற்றிய எனது கருத்து குறித்த விமர்சனத்திற்கு, ஆளுநர்கள் வேந்தர்களாக பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறியது என் அனுபவத்தை வைத்து தான்' என விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட பட்டியல்:
1. ’ஆளுநராக பதவியேற்றவுடன் தெலங்கானா மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தும் போதுதான் தெரிந்தது அங்கே 12 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தெரிய வந்தது. இருந்தாலும் பொறுப்பு IAS அலுவலர்களை அழைத்து அவர்களுடைய பணி நிர்வாகம் குறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் இரண்டு முறை பல்கலைக்கழக ஆய்வு மாநாடு நடத்தப்பட்டது.
அவ்வப்போது தெலங்கானா முதலமைச்சர் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டும், கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டும் நேரிலும் பொது வெளியிலும் வற்புறுத்திய பின்னர், எனது தொடர் முயற்சியால் சுமார் 2 ஆண்டுகளுக்குப்பின்பு 12 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
2. புதிய கல்விக்கொள்கை அறிமுகம் பற்றிய விவாதங்களையும், விழிப்புணர்வையும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படுத்தியது.
3. தெலங்கானாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விரிவான சுய ஆய்வறிக்கை வேண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் மூன்று மணி நேரம் ஒதுக்கி, அனைத்து பல்கலைக்கழகங்களையும் 1 மாத காலம் ஆய்வு செய்து பல்கலைக்கழகங்களின் தேவைகள், குறைகள் மற்றும் சாதனைகளைப் பட்டியலிட்டு அதன் அறிக்கைகளை உயர் கல்வி துறைக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்தது.
4.பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தும் பெங்களூரு NAAC சென்டருக்கு நேரடியாக சென்று தெலங்கானா பல்கலைக்கழகங்களின் தர ஆய்வறிக்கையை நேரடியாகப்பெற்று, தெலங்கானா முதலமைச்சருக்கு அனுப்பி வைத்து பல்கலைக்கழகங்களை மேம்படுத்த முன்னின்றது.
5. கரோனா முதல் அலையின்போது மாணவர்களின் கற்றல் தடைபடாத வண்ணம் நாட்டிலேயே முன்னோடியாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது.
6. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னாள் மாணவர்களின் பட்டியலை எடுத்து பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுத்தி முன்னெடுத்துச் செல்வது.
7.பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து பணியிடங்களை நிரப்பச்செய்தேன்.
8. தெலங்கானா அரசு பல தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டியபோது அதன் தரங்களை ஆராய்ந்த பின்னர், சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
9. அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆளுநரின் ஒப்புதல் எந்தவித அரசியல் தலையீடு இன்றி அரசாங்கம் அமைத்த தேர்வுக்குழு அங்கீகரித்த நபர்களையே துணை வேந்தர்களாக நியமித்தது அனைவராலும் வரவேற்கப்பட்டது.
10.பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம் அவர்களுடைய பொழுதுபோக்கு மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக உடல் நலம் பேணும் குறிப்பேடு பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
11.பல்கலைக்கழகங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட துணை நின்றது.
12. முதன்முறையாக பல்கலைக்கழக மாணவர்களுடன் காணொலிக்காட்சியின் வாயிலாக குறைகளைக் கேட்டறிவதற்கான "Chancellor connect" என்ற இணைய வழி நிகழ்ச்சியில் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பது.
13. 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் அனைத்துப்பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவிலும் தவறாமல் கலந்து கொண்டது போன்ற இவ்வளவு பணிகளையும் செய்தேன்.
இதுவரைக்கும் கடந்த 40 ஆண்டுகளில் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற தனி நபர் தவறுகளையும் பட்டியலிட்டு, எல்லா ஆளுநர்களும் தவறு செய்வதை போன்ற ஒரு தோற்றத்தை கற்பிக்க முயற்சிப்பது தவறான முன்னுதாரணம்.
ஆளுநர்களைப் பற்றி நீங்கள் கூறிய தவறுகளும் குற்றச்சாட்டுகளும் அமைச்சர்கள் தொடங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பல பிரபலங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருகின்றன. அதனால் மாநிலத்தில் அரசியல் சாசனத்தைக் கண்காணிக்கும் ஆளுநர்களே வேண்டாம் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
ஆளுநர்கள் பல்கலைக்கழகப்பணிகளை வேந்தர்களாக எந்த வித விருப்பு, வெறுப்பின்றி முதலமைச்சருக்கு தோளோடு தோள் நின்று கல்வி பணியாற்றுவதே சாலச்சிறந்தது. பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மாநில முதலமைச்சரே ஏற்றுக்கொண்டால் ஏற்கெனவே இருக்கும் ஆட்சிப்பணியோடு வேந்தர் பணியையும் ஏற்றுக்கொண்டால் அதுவும் கட்சி பணி ஆகி விடும் என்ற வகையில், மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஆளுநர்கள் வேந்தர்களாக செயலாற்றுகிறார்கள். இது அரசியலமைப்பு சட்டப்படி காலங்காலமாக ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையாகும்.
ஆளுநர்கள் ஆக்கப்பூர்வமான வேந்தர்களாக செயலாற்றுவதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்கி வருகிறார்கள் என்பதே எனது கருத்து. வேறு மாநிலத்தின் ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டின் மகளாக சில நியாயமான கருத்துகளைத் தெரிவிக்க உரிமை உள்ளது என்று எண்ணுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை நடக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் முதலமைச்சர் வாக்களிப்பார் - டி.கே.எஸ்.இளங்கோவன்