சென்னை: மேல்மா சிப்காட் திட்ட விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பி.யூ.சி.எல் அகில இந்திய பொதுச் செயலாளர் வீ.சுரேஷ் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளை் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டத்தை தவறாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்தி உள்ளனர். போராட்டத்தை அடக்க வேண்டும் என்றே, ஒரே நாளில் 5 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் போராட்டத்தை ஒடுக்க சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர்.
விவசாயிகள் காந்திய வழியில் மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்தது எந்த வகையில் குற்ற செயல் ஆகும். அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை நீக்க வேண்டும். அனைவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும், அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு நிலத்தை கொடுப்பதன் மூலமாக பணம் ஈட்டும் நோக்கில் விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும் இது போன்ற செயல்களில் சில அமைச்சர்கள் ஈடுபடுகின்றனர். தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.
ஆனால் அரசிடம் நிலம் இல்லாததால் மக்கள், விவசாயிகள் நிலத்தை எடுக்கிறது. கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு நகரத்தில் இருக்கும் மக்கள் உதவ மாட்டார்கள் என்கின்ற எண்ணத்தில் தான், இது போன்ற செயல்களில் அரசும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டபடி அறவழியில் போராட விவசாயிகளை தூண்டி விடுவது தவறில்லை. அருள் ஆறுமுகம் அதை தான் செய்தார். அஹிம்சை வழியில் போராடுங்கள் என்று அருள் விவசாயிகளை அறிவுறுத்தியது தான் அவர் மீது இவர்களுக்கு (அதிகாரிகளுக்கு) கோபம்.
எட்டுவழி சாலை போராட்டத்தின் அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அருளுடன் மேடையில் நின்று மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்வோம் என தெரிவித்தார். அப்போது அவர் போராட்டத்தை தூண்டிவிட வில்லையா?
நீட் தேர்விற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து வாங்கும் உதயநிதி என்ன கல்வித்துறை அமைச்சரா? இல்லை மருத்துவம் படித்திருக்கிறாரா? அவர் ஏன் நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்? மக்களை நீட்டுக்கு எதிராக தூண்டி விடுகிறார்? அவர் மீது குண்டாஸ் பாயுமா?
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அமைச்சர் எ.வ.வேலுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், அரசு தான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அருள் ஆறுமுகம் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அன்று எட்டுவழிச் சாலை போராட்டத்தின் போது அருள் அருகில் நின்று கொண்டு நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை திரும்ப பெறுவேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை செய்யவில்லை.
மேல்மாவில் கொண்டுவரப்படும் சிப்காட் திட்டம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மேலும், மற்ற இடங்களில் எந்த சிப்காட்-க்கு எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் முழுமையாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ளட்டும். சிப்காட் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை கொண்டு வந்து மக்களிடம் நம்பிக்கையை அரசு பெறட்டும்.
சிப்காட்டில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஹோட்டல் கட்டி உள்ளார். தற்பொழுது அரசின் நிலம் எதுவும் சிப்காட் கொண்டு வருவதற்கு இல்லை. எனவே அவர்கள் இனிமேல் விவசாய நிலங்களைத் தான் கையகப்படுத்துவார்கள். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்திற்கு ஏரியை ஒதுக்கீடு செய்து நிலம் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர்.
செய்யூர் சிப்காட் 1 மற்றும் 2 ஆகியவற்றில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படாமல் காலியாக உள்ளது. அந்த நிலங்களையும், யாருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிடுவதுடன், விரிவாக்கம் செய்ய உள்ள சிப்காட் பகுதிக்கு எந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளனர் என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத் திருவிழா: 63 நாயன்மார்களை தோளில் சுமந்து பள்ளி மாணவர்கள் ஊர்வலம்..!