சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குவதிலும், வெற்று சான்றிதழ்களை அச்சிடுவதிலும் ரூ.77 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (CAG) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறு மதிப்பீட்டு மோசடி, சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஆவணங்கள் அச்சடித்தல் உள்ளிட்ட விஷயங்களில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக இந்திய தணிக்கை குழு ஆய்வு செய்து அதன் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
மேலும் தேவையற்ற முறையில் கூடுதலாக மதிப்பெண் பட்டியல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும், மதிப்பெண்கள் பட்டியல்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படாமல் நிதி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் அச்சடிக்கப்பட்டது, டிஜிட்டல் மயமாக்கப்பட்டத்தில் முறைகேடு நடந்ததாக இந்திய தணிக்கை குழு அறிக்கையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையின் கணக்கு தணிக்கை குழு நடத்திய விசாரணையில் முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க தனியாக ஒரு துணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பேராசிரியர்களுக்கு விசாரணை கமிட்டி முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் 2016-17 காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்க்கழத்தில் பணியாற்றிய துணைவேந்தர், துணைவேந்தர் பொறுப்புக் குழு அதிகாரிகள், சுமார் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் பேராசிரியர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் கொள்முதல் செய்ததில் விதிமீறல் நடந்துள்ளது என இந்திய தணிக்கை குழு சுட்டி காட்டிய குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் முழு பொறுப்பிலேயே அந்த பணிகள் நடந்துள்ளதாக சட்டசபை பொது கணக்கு குழுவிற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த சம்பவங்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தவை எனவும், தனக்கும் இந்த விவகாரங்கள் குறித்தும் எந்த சம்பந்தமும் இல்லை என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.