திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பென்ஜமின் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,"வெற்றி கூட்டணியின் வேட்பாளர் பென்ஜமின் எளிமையான குடும்பத்தில் பிறந்து அமைச்சராக உயர்ந்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், அவரை வெற்றி பெறச் செய்து மீண்டும் அமைச்சராக அவர் வர வாக்களியுங்கள்.
மக்களாட்சி வேண்டுமா? மன்னர் ஆட்சி வேண்டுமா? மக்களாட்சி என்றால் அதிமுக, மன்னர் ஆட்சி என்றால் திமுக. 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி முதலமைச்சராக வந்துள்ளார். எங்கள் யோசனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். நாங்கள் அரசியலை ஒரு சேவையாக செய்து வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கார்ப்பரேட் அரசியல் செய்து வருகிறார்.
திமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்குச் சீட் கிடைக்கவில்லை, மூத்த நிர்வாகிகள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. நாங்கள் மக்களை நம்பி இருக்கின்றோம். திமுக பிரசாந்த் கிஷோரை நம்பி உள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். அத்தனை சமுதாயத்திற்கும் போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த கரோனா நிலை இருக்கும். அரசு வழங்குவதை நான் இலவசமாகப் பார்க்கவில்லை. அத்தியாவசியமாக பார்க்கிறேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் சலவை இயந்திரம் வழங்குவதைப் பெண் விடுதலைக்கு ஒரு கருவியாகப் பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவில் உழைக்கும் தொண்டர்கள் ஓரம்கட்டப்படுவர்- அன்புமணி தாக்கு