சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் தேநீர் கடை நடத்தி வரும் தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையானது நேற்று (ஏப்ரல் 13) மதியம் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது வீட்டருகே வசித்து வந்த 60 வயது முதியவர் உறங்கி கொண்டிருந்த பெண்குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தெரியவந்த சிறுமியின் தந்தை உடனே திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முதியவரை தேடி வருகின்றனர். இதே போல் நெற்குன்றம் ஜார்ஜ் நகர் பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனை அதே பகுதியில் பெயிண்டிங் வேலை செய்த சரவணன் என்பவர் உதவிக்காக அழைத்து மாணவனின் ஆடையை கழற்ற செல்லி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதில் சுதாரித்துக்கொண்ட மாணவன் அங்கிருந்து தப்பி வந்து பெற்றோரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.