நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு, தற்போது அதன் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தவும், அங்கு பின்பற்றி வந்த இடஒதுக்கீட்டு முறையையே தொடரவும் அனுமதி அளித்துள்ளது.
இது ஒருதலைபட்சமான முடிவு என பல்வேறு கட்சியினரும், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், " மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு (INI CET EXAM) நடத்துவது ஏற்புடையதல்ல.
நீட் தேர்வு மூலம் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை தன்னிச்சையாக பங்கு போட்டு கொடுக்கும் மத்திய அரசு, இதில் மட்டும் இப்படி ஓர் ஏற்பாட்டினை செய்வது கொஞ்சமும் நியாயமற்றது.
மாநில உரிமைகளை நசுக்கி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முடிவுகள் வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் " எனக் கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: "மத்திய அரசின் கல்லூரிக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தினால் தமிழ்நாட்டில் நீட் ரத்து செய்யப்படவேண்டும்"