சென்னை: சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ குறித்த நூலின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. இதில், தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி, ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா, அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளர் மது கவுட் யாஸ்கி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதனையடுத்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு, அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான மது கவுட் யாஸ்கி பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தியின் முதல் நடைப்பயணம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபெற்றது. இதில், மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது, 2வது முறையாக ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணமானது ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20ஆம் தேதி மும்பையில் முடிவடைகிறது. இதனை 15 மாநிலங்களில், 110 மாவட்டங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 66 நாள்கள் நடைபெறவுள்ள இந்த பயணத்தில் 6 ஆயிரத்து 713 கி.மீ பயணம் மேற்கொள்ளவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், “நாங்கள் அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை. மேலும், மதம் என்பது தனிநபர் விருப்பம், அதை யார் மீதும் திணிக்க முடியாது.
இந்தியா என்னும் மதச்சார்பற்ற நாட்டில், ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். நீ இதைத்தான் பின்பற்ற வேண்டுமெனக் கூற முடியாது. ஆனால் அதைத் தான் பாஜக செய்து வருகிறது. இதன் காரணமாகத் தான் காங்கிரஸ் கட்சி ராமர் கோயில் தொடக்க விழாவைப் புறக்கணிக்கிறது.
திமுகவின் சனாதன எதிர்ப்பு வட இந்தியாவில், காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாக இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “திமுக என்பது ஒரு திராவிட கட்சி. மேலும், தமிழகத்தில் அனைத்து மத மக்களும், வெளி மாநில மக்களுக்கு திமுக ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. மேலும், மதவாத அரசியல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது ஆனால் பாஜக மதத்தை தன் ஆயுதமாகச் செயல்படுத்தி வருகிறது.
இந்தியா கூட்டணி: இந்தியா கூட்டணியில் இருக்கும் கூட்டணிக் கட்சியில் தொகுதி பங்கீடு குறித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக 7 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுகள் முடிவடைந்துள்ளன. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, போன்ற மாநிலங்களில் பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளன. மேலும், மாநிலத் தலைவர்கள் சிறப்பாக அவர்கள் பணிகளைச் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் எப்போது நட்பு ரீதியாகத் தான் செயல்படுகிறது.
கார்த்திக் சிதம்பரத்தின் கருத்துக்குப் பதில் அளித்த அவர், "ராகுல் காந்தி மக்களின் தலைவர், மேலும் இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள் ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து மோடிக்கு எதிராகப் போராடி வருபவர் ராகுல் காந்திதான். மேலும், கார்த்திக் சிதம்பரம் பேசிய கருத்தை நான் பார்க்கவில்லை. கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பாக இருக்கும் நபர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிபிஐ மற்றும் அமலாக்க துறை பாஜகவின் ஆயுதமாகவும் செயல்பட்டு வருகிறது.. பவ்யா நரசிம்மமூர்த்தி!