சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இடையே கருத்து மோதல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதிமுகவின் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில் இரண்டு தரப்புகளின் செயல்பாடுகளும் இருப்பதாக தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய பொதுக்குழு வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரு அணிகளுக்கும் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்து, அதில் ஓபிஎஸ் அணியினர் நடத்தி முடித்தனர்.
அதிமுக தலைமையகம் சார்பாக வழக்கறிஞர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று (டிச.22) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அதிமுகவிற்கு உரிமை கூறுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பதவியில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதிமுகவின் தலைமை அலுவலகம் சாவி எடப்பாடி அணியிடம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதனால் அதிமுகவின் கொடி, சீல் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று எழுதப்பட்டிருக்கக்கூடிய 'லெட்டர் பேட்' ஆகியவை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது சட்டத்துக்கு எதிரான செயலாகும். நேற்றைய தினம் (டிச.21) அதிமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தை ஓபிஎஸ் அணியினர் தனியாக நடத்தினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழா என்று ஓபிஎஸ் நடத்தினர். இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என அதிமுக தலைமையகம் சார்பில் ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜேஇஇ விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை: அன்புமணி ராமதாஸ்